ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்கு முன்னர் கூட்டணி கட்சிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டு உடன்படிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் அந்த உடன்படிக்கைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் தற்போது கலந்துரையாடல்கள் எதுவும் நடப்பதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது மிகப் பெரியளவில் ஊழல், மோசடிகள் நடக்கின்றன. காணிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. உறவினர்கள், நண்பர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செயற்பட்டால், கூட்டணி கட்சிகள் தனியான இடங்களில் கூட்டங்களை நடத்துவது தொடர்ந்தும் நடந்தால், எதிர்காலத்தில் நிலைமை மோசமடையும் எனவும் லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கையெழுத்திட்ட உடன்படிக்கையை பொதுஜன பெரமுன மதித்து நடக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தம்முடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையை பொதுஜன பெரமுன நிறைவேற்ற தவறிவிட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விமர்சனம் வெளியிட்டது.
ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்ட நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், மூன்று ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் இரண்டு மாகாண ஆளுநர் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழங்கவில்லை.
அத்துடன் வெளிநாட்டுத்தூதுவர் பதவிகளையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியளித்தப்படி வழங்கவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இது குறித்த விடயங்களை பொதுஜன பெரமுன கவனத்தில் கொண்டு இரண்டு கட்சிகளுக்கு இடையிலான உடன்படிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரியிருக்கிறது