
நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதிக்கு முரங்கன் பொலிஸாரால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பாக, வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவதற்காகவே அழைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எerழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள, முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு கோரி, நேற்று மதியம் 2.30 மணியளவில் முருங்கன் பொலிஸார் நானாட்டானில் உள்ள எனது வீட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

அதன் போது, நேற்று மாலை 3 மணியளவில், முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு என்னை வருகை தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். எனினும் பிரிதொரு நிகழ்வு இருந்தமையினால், திடீர் அழைப்பின் காரணமாக என்னால் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. ஆகவே இன்று மாலை, முருங்கன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்கு மூலம் வழங்க உள்ளேன். மக்களின் பிரதிநிதி என்ற வகையில் மக்களின் உரிமைக்காக இடம்பெற்ற குறித்த பேரணியில் கலந்து கொண்டு எனது ஒத்துழைப்பை வழங்கினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.