ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் உருவெடுத்துள்ள நெருக்கடி நிலைமை குறித்து மற்றுமொரு பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் மாலை நடைபெறவிருக்கிறது. அத்துடன் அடுத்தவாரம் ஜெனிவாவில் ஸ்ரீலங்காவுக்கு ஏற்படவுள்ள சவால் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- Advertisement -
இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கம்மியூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான ஜே.வீரசிங்க இந்த தகவலை உறுதிசெய்தார். குறிப்பாக மொட்டுக் கட்சிக்குள் தலைமைத்துவப் பொறுப்பினை மாற்றம் செய்தல், தலைமைத்துவம் குறித்து பேசியபோது அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பல்வேறு அவதூறு ஏற்பட்டமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் பேச்சு நடத்த விமல் அணியினர் ஏற்கனவே கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
- Advertisement -

இதற்கிணங்கவே இச்சந்திப்பிற்கு ஜனாதிபதி கோட்டாபய நேரம் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, மொட்டுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமைகளை அவதானித்துவந்த ஜனாதிபதி இன்றுவரை எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தவிர, ஜெனிவா நெருக்கடி, நாட்டின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பொதுவான பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் 22ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக பிரித்தானியாவினால் பொறுப்புகூறல் சார்ந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தயாராகி வருகின்ற நிலையிலேயே இன்றைய தின சந்திப்பும் நடைபெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.