பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின், மாங்குளம் பொலிஸ் பிரிவினரால் கடந்த 06.02.2021 அன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றக்கட்டளை வழங்கப்பட்டது. இருப்பினும் அதனை மீறி பேரணியில் கலந்துகொண்டதாகத் தெரிவித்து நேற்று மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் தம்மிடம் விசாரணைகளை மேற்கொண்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை, அவரது அலுவலகத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரால், முல்லைத்தீவு மாவட்டத்தின், மாங்குளம் பொலிஸ் பிரிவினரால் கடந்த 06.02.2021 அன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றக்கட்டளை அவருக்கு வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அதனையும் மீறி அந்தப் பேரணியில் கலந்துகொண்ட ஒளிப்பதிவுகள் தங்களிடம் உள்ளதாகக்கூறியே அவரிடம் வாக்குமூலம் கோரப்பட்டது.

பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலம் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த நாடு ஜனநாயக நாடு. எனக்கிருக்கும் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் இவ்வாறான சாத்வீகப் போராட்டங்களில் நான் கலந்துகொள்ளச் சென்றது உண்மைதான். ஆனால், மாங்குளம் பொலிசார் மாங்குளம் புகையிரதக் கடவைக்கு அருகில் வைத்து நான் மட்டுமே வந்த எனது வாகனத்தினை மறித்து அந்த நீதிமன்றக் கட்டளையினை வழங்கினார்கள்.
அதனை வழங்கியதன் பின், நீதிமன்றத்தின் கௌரவத் தன்மையினை மதித்து, எனது பெயர் அக்கட்டளைப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்படாவிடினும் கூட அதனை கௌரவமாக மதித்து தொடர்ந்து அப்பேரணியில் செல்வதை நிறுத்திக்கொண்டு நான் மட்டக்களப்புக்கு திரும்பிவிட்டேன் என்பதை அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தேன் என்றும் தெரிவித்தார்.