யாழ். குடாநாட்டில் உள்ள தீவுகளை சீனாவுக்கு வழங்குவதன் ஊடாக நாட்டிற்கு ஏற்படுகின்ற பேராபத்திற்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார எச்சரித்துள்ளார். கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் செய்து, மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
- Advertisement -

இலங்கையின் நிலங்களை வேறு நாடுகளுக்கு வழங்குவதில் மிகப்பெரிய ஆபத்தான நிலைமை இருக்கின்றது. விசேடமாக சீனா உலகில் பலம்வாய்ந்த பிரிவாக மாறிவருகிறது. அதற்கான முயற்சியின் ஓரங்கமாக இலங்கையில் நிலங்களை எதிர்பார்க்கின்றது. மறுபக்கம் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் பலம்வாய்ந்த நாடுகளாக உள்ளன.
- Advertisement -

ஆசிய வலயத்தில் இந்தியாவே பலம்வாய்ந்த நாடாக உள்ள நிலையில், சீனா – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான, “யார் பலம் வாய்ந்தவன் என்கிற போட்டியினிடையே இலங்கை அதில் தலையிடாமல் நழுவிச்செல்லும் தந்திரத்தில்” இருக்க வேண்டும். குறிப்பாக தீவுகள் போன்ற பெறுமதியான நிலங்களை சீனாவுக்கு வழங்குவதால் அதனூடாக ஏற்படுகின்ற ஆபத்துக்களை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆகவே ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற போது மிகுந்த அவதானத்துடன் அரசாங்கம் செயற்பட வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பொறுத்தவரை அந்த துறைமுகம் இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமானதாகவும், அதன் முதலீடுகளை சீனாவுக்குமே வழங்கியிருக்கின்றோம். அவ்வாறு செய்திருக்காவிட்டால் முழு துறைமுகமும் சீனாவின் வசமாகியிருக்கும் என்றார்.