அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பம் ஒன்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சாதாகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களான நடேசலிங்கம் – அவரின் மனைவி பிரியா ஆகிய இருவரும் கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக சென்றவர்கள். இவர்கள் இருவரும் மெல்போர்னில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- Advertisement -

இதில் நடேசலிங்கத்துக்கும், பிரியாவுக்கும் அங்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது மூத்த மகளுக்கு 6 வயதும், 2ஆவது மகளுக்கு 4 வயதும் ஆகிறது. இந்த நிலையில், இந்த ஈழத் தமிழ்க் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தற்காலிகமான விசா காலம் முடிந்துவிட்டதால், அவர்களை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்துமாறு, அவுஸ்திரேலியாவின் கன்சர்வேட்டிவ் அரசு முடிவு செய்து கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
- Advertisement -
இந்நிலையில் தங்களை அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்த தடைவிதிக்க கோரி நடேசன் குடும்பத்தினர் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், இந்த மனுவை எதிர்த்து அவுஸ்திரேலிய அரசும் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு பெடரல் நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய குழுவால் விசாரணை செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய குழு “அவுஸ்திரேலியாவில் பிறந்த இரு குழந்தைகளுக்கும் விசா வழங்க அரசு மறுக்கக் கூடாது. தமிழ்க் குடும்பத்தினர் தங்கள் மகள்களுக்கான விசாவை விண்ணப்பித்து பெறலாம். நடேசன் குடும்பத்தினர் தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்” என தீர்ப்பளித்தனர்.