தெலுங்கானாவில் கூட்டு பலாத்தகாரம் செய்துவிட்டதாக பொய் புகார் அளித்த மருத்துவ மாணவியால் பெரும் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது. பல வித காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் மத்தியில் போலீசார் விசாரணைக்கு பயந்து தன்னை ரேப் செய்து விட்டார்கள் என்று மருத்துவ மாணவி கொடுத்துள்ள பொய் புகார் தெலுங்கானா போலீசாருக்கு தர்ம சங்கடத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் காண்ட்லகோயாவில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரியில் மருந்தியல் இளங்கலை படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த புதன் கிழமை அன்று மாலை 7.20 அளவில் அந்த மாணவி கீசரா பகுதியில் ஆடைகள் கலைக்கப்பட்ட நிலையில் மயங்கி கிடந்ததாக ராச்சகொண்டா காவல் நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது.

அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டு மெடிபள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாணவியை ஆட்டோ டிரைவர் உட்பட நான்கு பேர் சேர்ந்து ராச்சகொண்டா அருகே உள்ள புதர் பகுதியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்த மாணவி தெரிவித்தார். அதனை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அதன்படி, சம்பவத்தன்று மாணவி சென்ற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சம்பவத்தன்று கீசரா பகுதியில் மாலை 5.20 மணியளவில் ஆட்டோவில் ஏறிய மாணவி பின்னர் இரவு 7.20 மணிக்கு கால்நடையாக அன்னோஜிகுடாவில் செல்வது தெரிய வந்தது. ஆனால், மாணவி கூறிய தகவல்கள் முரணாக இருந்தன.

தொடர்ந்து மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரை கடைசியாக இறக்கிவிட்ட ஆட்டோ டிரைவர் உட்பட ஒரு சில ஆட்டோ டிரைவர்களும் விசாரிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் கூறிய தகவல்கள்படி சிசிடிவி காட்சிகள், செல்போன் டவர் சிக்னல் ஆகியவை ஒன்றாக பொருந்தின. மேலும், சம்பவம் நடந்ததாக மாணவி குறிப்பிட்ட இடங்களில் அவர்கள் சென்று வரவில்லை என்றும் தெளிவாகின. இந்த நிலையில், மாணவி மீது போலீசாருக்கு சந்தேகம் எழவே, அவரிடம் நடந்தவற்றை தெளிவாக கூறுமாறு கேட்டனர். அப்போது மாணவி அளித்த தகவல் போலீசாரை திடுக்கிட வைத்ததது.
அதாவது புகார் அளித்த மாணவி தனது வீட்டை விட்டு வெளியேற சம்பவத்தன்று முயற்சி செய்துள்ளார். ஆனால், போலீசார் விசாரணையில் இறங்கியதால் கடத்தல் மற்றும் கூட்டு பலாத்காரம் நாடகமாடியது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் மாணவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

மேலும், மாணவி கொடுத்த பொய்யான புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர்கள், பயணிகள் என பலரிடம் விசாரணை செய்து சிரமம் ஏற்படுத்தியதற்கு ராச்சகொண்டா போலீசார் மன்னிப்பு கேட்டதோடு, வழக்கைத் தீர்ப்பதில் அவர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.