இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சரவைக்கு இல்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவுக்கு மடடுமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- Advertisement -

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் புதைக்கப்படும் என தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்திருந்தார்.
- Advertisement -

இது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ ஏன் அமைச்சரவைக்கோ கூட இல்லை. அந்த அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவுக்கு மட்டுமே உள்ளது. வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவிலிருந்து மருத்துவர் அசேல குணவர்தன பரிந்துரைகளைப் பெறுவார். அதன்பின்னர் வர்த்தமானி வெளியிடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.

அதுவரை தற்போது சடலங்களை தகனம் செய்யும் விதிமுறைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.