
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நாவலப்பிட்டி ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி நேற்று மாலை ஹரங்கல – கொத்மலை நீர்தேக்க பிரதான வீதியில் ரத்மிலபிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகியதிலேயே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கர வண்டி சாரதிக்கு முச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹரங்கல பகுதியை சேர்ந்த ஆர்.எம்.புத்திக்க வயது – 30 என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த நபர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.