இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு குறித்து சுகாதார அமைச்சு தற்போது ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும், அதன் பின்னர் எந்த அளவிற்கு திரிபு உள்ளது என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும் சுகாதார சேவைகள் துணைப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவாமல் மக்கள் தம்மை பாதுகாக்க இரண்டு முககவசங்களை அணிவது சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு இரண்டு முககவசங்களை அணிவது கொரோனா வைரஸிலிருந்து அதிக பாதுகாப்பை பெறமுடியும் என்பதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார். மேற்கத்தைய மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவின் வுஹானில் இருந்து உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸை விட தற்போதைய கொரோனா வைரஸ் 56 முதல் 75 சதவீதம் வரை உலகளவில் பரவ வாய்ப்புள்ளது. இது அசல் வைரஸை விட மிகவும் ஆபத்தான ஒரு இனமாகும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பொதுவான அறிகுறி இருமல், உடல் சோர்வு, பலவீனம், தலைவலி, தசை வலி, தொண்டை புண் மற்றும் காய்ச்சல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விரைவான அன்டிஜன் பரிசோதனை மூலம் பெரும்பாலான மேற்கு நாடுகளில் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொரோனா வைரஸ் திரிபு அவ்வப்போது மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதாகவும், தற்போது கொரோனா வைரஸுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் பைசர் தடுப்பூசி, திரிபுக்கு எதிராக சிறிய பாதுகாப்பை அளிப்பதாகவும் சோதனைகள் தெரிவிக்கின்றன.