கொவிட்–19 நோய்த் தொற்றின் மூலத் தரவுகளை உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவுக்கு வழங்க சீனா மறுத்திருப்பதாக அந்த சர்வதேச குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வுஹான் நகரில் 2019 டிசம்பர் மாதம் நோய்த் தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 174 சம்பவங்கள் தொடர்பில் மூல நோயாளர்களின் தரவுகளையே உலக சுகாதார அமைப்பின் குழு கோரியதாக அவுஸ்திரேலிய தொற்றுநோயியல் நிபுணரான டொமினிக் டோயர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த மூலத்தரவுகள் அநாமதேயமானது என்றபோதும் அதில் தனிப்பட்ட நோயாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அதற்கு அவர்களின் பதில்கள் மற்றும் அது பற்றிய மீளாய்வுகள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று டோயர் தெரிவித்துள்ளார். “இது நோய்த் தொற்று ஒன்றுக்கான நிலையான நடைமுறையாக உள்ளது” என்று அவர் வீடியோ அழைப்பு வழியாக தெரிவித்துள்ளார்.
இந்த 174 சம்பவங்களில் பாதி அளவு மாத்திரமே வைரஸ் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஹுனான் சந்தையுடன் தொடர்புபட்டிருப்பதால் இந்த மூலத் தரவுகள் முக்கியமானது என நிபுணர்கள் கருதுகின்றனர்.