தமிழ் – முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும், தமிழ் பேசும் மக்களாக இணைந்து செயற்பட வேண்டும் என கூறி வரும் சுமந்திரன் போன்ற கூட்டமைப்பினர் இதுவரை முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு குரல் கொடுத்துள்ளார்களா? என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கேள்வியெழுப்பியுள்ளார். அம்பாறை – கல்முனை பகுதியில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
- Advertisement -
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமந்திரன் போன்றவர்கள் முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் தமிழ் பேசும் மக்களாக இணைந்து செயற்பட வேண்டும் கூறி என அடிக்கடி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினாலும் இதுவரை முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு குரல் கொடுத்துள்ளார்களா? தீர்த்துள்ளார்களா? என்பதை பார்க்க வேண்டும்.
- Advertisement -
காணாமல் ஆக்கப்பட்டோருக்காக பேரணிகளை நடாத்துகின்றனர். ஊர்வலங்களை நடத்துகின்றார்கள். மாநாடுகளை நடத்துகின்றார்கள். ஆனால் விடுதலை புலிகள் உட்பட கூட்டமைப்பில் உள்ள கட்சிகளால் அதாவது ஆயுதம் தாங்கிய இயக்கங்களாக இருந்த காலங்களில் இவர்களினால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன நிவாரணங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்கள் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை.

அதுமாத்திரமன்றி அவ்வாறு கடத்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்களை அழைத்து ஏதாவது செய்துள்ளார்களா? அதுவும் இல்லை. வெறுமனே தங்களுக்கு இசைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என கூறுவதும் தங்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனமாக இருப்பதனால் எவ்வாறு தமிழ் முஸ்லிம் உறவினை ஏற்படுத்த முடியும் என கேட்க விரும்புகின்றேன். எனவே தான் சகலருக்கும் ஒரு நியாயம் கிடைக்க வேண்டும்.
இயக்கங்கள் மற்றும் விடுதலை புலிகளினால் கடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயங்கள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு நியாயமாக செயற்படுகின்றது என்று கூறமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.