ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் வூட்லண்டபசார் பகுதியில் நேற்று மாலை வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதி வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் சாரதி தலைமறைவாகியுள்ளார்.

குறித்த வேன் பள்ளத்தில் பாய்ந்த உடன் சாரதி இறங்கி வேனினை தாழ்பாள் போட்டுவிட்டு வீதியில் ஹட்டன் பக்கமாக நடந்து சென்றதாகச் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை எந்த வித தகவலும் வழங்காமையினால் இந்த விபத்து பொலிஸார் மத்தியில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
வேன் சாரதி போதையில் வாகனம் செலுத்தினாரா? அல்லது சட்ட விரோத பொருட்கள் ஏதும் குறித்த வேனில் உள்ளனவா? அல்லது வேறு ஏதும் காரணங்களினால் தலைமறைவாகினாரா? போன்று பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் குறித்த வேன் விபத்து இடம்பெற்றது, தொடர்பாகவும் சாரதி தொடர்பாகவும் வேனில் காணப்படும் வாகன அனுமதி பத்திரத்தினையும், பொது மக்களின் தகவல்களின் அடிப்படையிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான வேன் பற்றைகளில் சிக்கியிருப்பதனால் பள்ளத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சாரதியில்லாததனால் அதனைத் தடுப்பது சிக்கலாகக் காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்

