தொடர்ந்து குறி வைக்கப்படும் விஜய்.. அந்த பரபரப்பே அடங்கல அதுக்குள்ள இன்னொன்னா.. எதுல முடியப்போகுதோ?

நடிகர் விஜயை வைத்து படம் பண்ணும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனையில் சிக்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக உள்ளார். ஏராளமான ரசிகர்களையும் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். மற்ற நடிகர்களை காட்டிலும் விஜய்க்கு குட்டி ரசிகர்கள் அதிகம். அதேபோல் இளைஞர்களும் தீவிர ரசிகர்களாக உள்ளனர் நடிகர் விஜய்க்கு.

தனிக்கொடி
நடிகர் விஜயை வைத்து படம் பண்ணினால் லாபம் கேரண்டி என்பதால் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். விஜய் படம் என்றால் வசூல் குவியும் என படங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிறார்கள் விநியோகஸ்தர்கள். நடிகர் விஜய் நடிப்பு மட்டுமின்றி, அரசியலிலும் ஆர்வமாக உள்ளார். தனது ரசிகர் மன்றத்திற்கு என தனிக்கொடி வைத்துள்ளார் விஜய்.

கமலும் ரெடி
அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களையும் கூறி சூடேற்றுவார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு நடிகர் கமல்ஹாசனும் முன்னொரு பேட்டியில் சகோதரர் விஜய் விரும்பினால் இணைந்து பணியாற்றலாம் என்று கூறியிருந்தார்.

பிகில் படம்
இப்படியாக அவரது அரசியல் வருகைக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் விஜய் மட்டுமின்றி விஜயை வைத்து படம் பண்ணும் தயாரிப்பாளர்களும் குறி வைக்கப்படுகிறார்கள். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.

ஐடி ரெய்டு
படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு பைனான்சியர் அன்புச்செழியன் பைனான்ஸ் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் இருவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து கோடி கோடியாக பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விஜய் வீட்டிலும்
பைனான்சியர் அன்புச்செழியன் அரசியல் செல்வாக்கு மிக்க நபர் என்றாலும் அவரது கண்களிலும் விரலை விட்டு ஆட்டியது வருமான வரித்துறை. அப்போது நடிகர் விஜயிடம் ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே சம்மன் கொடுத்து அழைத்து வந்த வருமான வரித்துறை அவரிடம் விசாரணை நடத்தியதோடு மட்டுமின்றி அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்கள் சோதனை நடத்தினர்.

மீண்டும் ரெய்டு
பிகிலை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி நடை பெறவுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

விஜய்க்கு குறி?
தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் குறி வைத்து வருமான வரித்துறை வட்டத்துக்குள் கொண்டு வரப்படுவது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் மார்க்கெட்டை குலைக்கவும், அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்க வேண்டும் என்பதற்காகவே விஜயை குறி வைத்து இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக விஜய் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *