‘ சிங்கிள் ஷாட்டில் டபுள் சிக்ஸரைக் கண்ட ஆரவாரத்தில் பிகிலடித்துக் கொண்டிருக்கிறார்கள் தோனி – விஜய் ரசிகர்கள். சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்றுவரும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பின்போது விஜய்யும் தோனியும் இன்று சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேற லெவலில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. 40 ப்ளஸில் இருக்கும் தோனி நியூ ஹேர் ஸ்டைலிலும்… சால்ட் அண்ட் பெப்பர் லுக் தாடியில் ’லுக்’விடவைக்கும் விஜய்யும் சந்தித்தப் புகைப்படங்கள் இருவரின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாய் அமைந்திருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. சமீபத்தில் ஈசிஆர் பகுதியில் தொடங்கிய, இதன் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பின் தொடர்ச்சி இன்று முதல் சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. விஜய் இருக்கும் அதே கோகுலம் ஸ்டூடியோவில்… ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் முதல் நடக்கும் ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸுடன் செல்ல சென்னை வந்துள்ள தோனியின் விளம்பர படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது.

ஒரே இடத்தில் கிரிக்கெட்டின் ‘தல’யும் – தமிழ் சினிமாவின் தளபதியும் இருந்து சந்தித்துக்கொள்ளாமல் இருந்தால்… அந்த கோகுலம் ஸ்டூடியோ கட்டிடம் கூட மன்னித்திருக்காது என்பது ரசிகர்களின் மனநிலை. சந்தித்தே விட்டார்கள்….! இருவர் சந்திப்பின் பின்னணி குறித்து ’பீஸ்ட்’ படக்குழுவினரிடம் விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவல்,
”கோகுலம் ஸ்டூடியோவின் மூன்றாவது தளத்தில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பும், முதல் தளத்தில் தோனி நடிக்கும் விளம்பரத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இன்று காலையிலேயே ஸ்பாட்டுக்கு வந்து ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய்க்கு தோனி, முதல் தளத்தில் இருப்பது தெரியாது. அதேபோல், தோனிக்கும் தெரியாது. இருவரின் சந்திப்பை நிகழ்த்தியது தோனியின் மேனேஜர் சுவாமியும் ‘பீஸ்ட்’ படக்குழுவினரும்தான். தோனியின் விளம்பரப் படப்பிடிப்பு நடக்கிறது என்று தெரிந்ததும் தோனியின் மேனேஜர் சுவாமிக்கு போன் செய்த படக்குழுவினர் “விஜய் சார் படப்பிடிப்பும் இங்குதான் நடக்கிறது. இருவரும் சந்திக்க முடியுமா?” என்று கேட்டுள்ளனர். “கேட்டுவிட்டு வருகிறேன்” என்ற தோனி மேனேஜர் சுவாமி, “எப்போது வேண்டுமென்றாலும் தோனி சந்திக்க ரெடியாக இருக்கிறார்” என்ற தகவலை உற்சாமுடன் சொல்லியிருக்கிறார்.

இன்று காலை 11 மணிக்கு ஷூட்டிங் பிரேக்கில் இருந்த விஜய்க்கு, அவரின் உதவியாளர் மூலம் தோனியின் விளம்பரப் படப்பிடிப்புத் தகவலை பாஸ் செய்தது படக்குழு. “அப்படியா?” என்று ஆச்சர்யமுடன் கேட்ட விஜய்யிடம் “தோனி எப்போது வேண்டுமென்றாலும் சந்திக்க ரெடியாக இருக்கிறார்” என்றத் தகவலையும் சொல்லியுள்ளது. அடுத்த வார்த்தையே “அப்போ, இப்போவே போய் தோனியை பார்க்கலாமா” என்றுதான் விஜய்யிடமிருந்து வந்த ரிப்ளை.
அதன்பிறகு, தோனியே ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நடக்கும் மூன்றாவது தளத்தில் விஜய்யின் கேரவனுக்குச் சென்று உரையாடி இருக்கிறார். 10 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இவர்களுடன், தோனி மேனேஜர் சுவாமி, நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.

இந்த சந்திப்பு முடிந்ததும், மேலிருந்து தோனியை அவரது கேரவன் வரை நடந்து சென்று விட்டிருக்கிறார் விஜய். அந்தப் புகைப்படங்கள்தான், விஜய் கேரவன் அருகே நின்றிருக்கும் புகைப்படங்கள். அதற்குள் கூட்டம் குவிந்துவிடவே இருவரும் அவரவர் கேரவனுக்குள் சென்றிருக்கிறார்கள். இருவரது சஸ்பென்ஸ் சந்திப்பு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் சந்திப்பாகிவிட்டது. கோகுலம் ஸ்டூடியோ குதூகலம் ஸ்டூடியோவாகிவிட்டது.