HomeAstrologyகன்னி தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை

கன்னி தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை

கன்னி (உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

கன்னி ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு, ஆறில் குரு இருக்க, பஞ்சம ஸ்தானத்தில் சனி அமர, விரயாதிபதி சூரியனோடு உங்கள் ராசிநாதன் புதன் இணைந்து அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் விதத்தில் பிறக்கின்றது. கிரக நிலைகள் அடிப்படையில் பார்க்கும் பொழுது சுபவிரயங்கள் அதிகரிக்கும். துணிந்து நீங்கள் எடுத்த முடிவால் உறவினர்கள் ஆச்சரியப்படுவர். தொழில் முன்னேற்றமும், தொல்லை தந்த உடல்நலமும் சீராகும் வாய்ப்பும் உண்டு.

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், சூரியனோடு இணைந்து புத – ஆதித்ய யோகத்தையும், சுக்ரனோடு இணைந்து புத- சுக்ர யோகத்தையும் உருவாக்குகிறார். எனவே கடந்த ஆண்டு நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது வருடத் தொடக்கத்திலேயே துரிதமாக நடைபெறும்.

அதே நேரத்தில் முன்னேற்றத்தைக் குறிக்கும் இடமான 3-ம் இடத்தில் கேது இருப்பதால், எந்நேரமும் எதிர்மறை சிந்தனைகள் வந்து கொண்டே இருக்கும். அவற்றில் இருந்து விடுபட்டு நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் நன்மை ஏற்படும். அஷ்டம ஸ்தானம் வலுவாக இருக்கும் இந்த ஆண்டில், வருட தொடக்கத்திலேயே பாக்கிய ஸ்தானத்திற்குரிய கிரக பலமறிந்து, அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தடைகளும், தாமதங்களும் அகலும்.

‘6-ல் குரு ஊரில் பகை’ என்பார்கள். எனவே உறவினர்களின் பகையும், உடன் இருப்பவர்களின் தொல்லையும் உருவாகிக் கொண்டேயிருக்கும். கடன்சுமை அதிகரிக்கலாம். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 4, 7ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, மறைவிடமான 6-ல் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளையே வழங்குவார். எனவே காரியங்கள் கடைசி நேரத்தில் கூட கைகூடிவிடும். கடமையை சீரும், சிறப்புமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் கனிந்த பேச்சுக்களால் எதிரிகளின் தொல்லை குறையும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

குறிப்பாக அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு, அது கிடைக்கும். ‘நேர்முகத் தோ்விற்கு பலமுறை சென்றும் நினைத்தது நடக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனிபகவான் வீற்றிருப்பதால், பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் முழுமையான பலன் கிடைக்கும்.

குருவின் வக்ர இயக்கம்
ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அவர் 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கிறார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை குரு பகவான் 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது, யோகத்தையே வழங்கும். எனவே வக்ர காலத்தில் வளர்ச்சி கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். திருமண முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் வரலாம். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன் பிறகு 13.4.2022-ல் மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது.

குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதியும்போது, குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உடன் இருப்பவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும்.

மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சொந்த வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதால் மிகுந்த நற்பலன் கிடைக்கும். தொழில் முன்னேற்றம், தொகை வரவில் திருப்தி, சுபகாரியம் கைகூடுதல், கட்டிடம் கட்டும் முயற்சி தொடருதல் போன்றவை ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய பாதை புலப்படும். வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகும். வாசல் தேடி வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ள முன்வருவீர்கள். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும். எதையும் யோசித்து செய்யுங்கள்.

ராகு-கேது பெயா்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 2-ம் இடத்திற்கு கேதுவும், 8-ம் இடத்திற்கு ராகுவும் வருகிறார்கள். 8-ல் ராகு சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. நிறைய விரயங்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும். தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். மனபயம் அதிகரிக்கும். ‘இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா?’ என்று இரட்டித்த சிந்தனை மேலோங்கும். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் என்று, பெரிய அளவில் கடன் சுமை கூட வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்படுங்கள். துணையாக இருக்கும் கூட்டாளிகளை விலகாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

2-ல் கேது இருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்கள். குடும்பத்தில் சச்சரவுகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. ‘நாணய பாதிப்பு ஏற்படுகிறதே’ என்று கவலைப்படுவீர்கள். பிள்ளைகளாலும் ஒருசில பிரச்சினைகள் உருவாகலாம். ‘பார்க்கும் வேலையில் பிரச்சினைகள் அதிகரிக்கின்றதே, சம்பளம் குறைவாக இருந்தால் கூட பரவாயில்லை, வேறு வேலைக்கு முயற்சி செய்யலாம்’ என்று முயற்சித்தவர்களுக்கு இப்பொழுது வேறு வேலை கிடைக்கும். இருப்பினும் அது திருப்தி அளிக்காது. சேமிப்பில் சிறிது கரையும்.

மற்றவர்களின் மனதை புரிந்து கொண்டு செயல்படாவிட்டால் மனக்கலக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கியத் தொல்லையும், மருத்துவச் செலவுகளும் வரும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் தொல்லையுண்டு. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனி பகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. 6-ம் இடத்திற்கு அதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். தொழில், உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பொருளாதார வளர்ச்சி அதிகரித்து, கொடுக்க வேண்டிய கடனைக் கொடுத்து நிம்மதி காண்பீர்கள். அதே நேரத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாக சனி விளங்குவதால், சொத்துப் பிரச்சினைகள் தலை தூக்கலாம். சொந்தங்களில் ஒரு சிலர் பகையாகலாம்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் – சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் பகைக் கிரகங்களின் பார்வை இருப்பதால் பல வழிகளிலும் மன சங்கடங்கள் ஏற்படும். கொடுக்கல் – வாங்கல்களில் ஒருசிலர் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். நட்பு பகையாகலாம். உடல்நலத்தில் சீர்கேடுகள் ஏற்பட்டு அகலும். மனக்கலக்கம் அகல மாருதி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு விரயத்திற்கேற்ற வருமானம் வரும் ஆண்டாக அமையப் போகிறது. சென்ற ஆண்டில் நிறைவேறாத எண்ணங்கள் குருப்பெயா்ச்சிக்குப் பிறகு நடைபெறும். கணவன் – மனைவிக்குள் பிணக்கு வராமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். செவ்வாய் – சனி பார்வை, காலத்தில் உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்தபடி இடமாற்றங்கள் ஏற்படலாம். கேது 3-ல் இருப்பதால் வரும் மாற்றங்களை யோசித்து ஏற்றுக் கொள்வதே சிறந்தது. குரு வழிபாடு நன்மை தரும்.

வளா்ச்சி தரும் வழிபாடு
புதன்கிழமை தோறும் விரதம் இருந்து பெருமாள் வழிபாட்டை மேற்கொள்வதுடன், யோகபலம் பெற்ற நாளில் மதுரை கூடலழகிய சுந்தர ராஜப் பெருமாளையும், லட்சுமியையும் வழிபட்டு வந்தால் சகல யோகங்களும் வந்து சேரும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments