HomeAstrologyசிம்மம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை

சிம்மம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை

சிம்மம் (மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

சிம்ம ராசி நேயர்களே! பிறக்கும் புத்தாண்டு குரு பார்வையோடு பிறப்பதால், நினைத்த காரியம் நிறைவேறும் ஆண்டாகவே அமைகின்றது. 9-ம் இடத்திற்கு அதிபதியான செவ்வாயும், 10-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரனும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பதால், தொழில் வளம் மிகச் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்போடு புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பொருளாதார நிலை உயரும். புத -ஆதித்ய யோகம் இருப்பதால் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும் வருடமாக இந்த வாரம் அமையும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்று, தனலாபாதிபதியான புதனோடு இணைந்திருக்கின்றார். எனவே ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். சகோதர வர்க்கத்தினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். தனவரவில் இருந்த தட்டுப்பாடுகள் அகலும். ‘வாங்கியதைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்ததை வாங்க முடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது விடிவுகாலம் பிறந்துவிட்டது. தடையின்றித் தனவரவு வந்து கொண்டேயிருக்கும். புகழ்மிக்கவர்களோடு இணைந்து புதிய தொழிலைத் தொடங்குவீர்கள்.

10-ம் இடத்தில் உள்ள செவ்வாய், சுக்ரன் வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெறுகின்றார். தொழில் ஸ்தானம் வலுவாக உள்ளது. ஸ்தம்பித்து நின்ற தொழில் இனி வெற்றி நடைபோடும். வாடிக்கையாளர்கள் வந்த வண்ணமாக இருப்பர். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். அரசியல் பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடந்து கொண்டே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். ஊர் மாற்றம், இலாகா மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தால், அதுவும் நிறைவேறும்.

6-ம் இடத்தில் சனி இருக்கின்றார். அதுவும் சொந்த வீட்டில் பலம் பெற்றிருக்கின்றார். 6-ம் இடம் என்பது எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றை குறிப்பதாகும். எனவே மறைமுக எதிர்ப்பும், சிறிதளவு கடனும் இருந்துகொண்டே இருக்கும். இதையெல்லாம் தாண்டி, குரு பகவானின் பார்வை உங்கள் ராசியில் பதிவதுதான் யோகம். அந்த குருவைப் பலப்படுத்த வியாழன் தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவதோடு, யோகபலம் பெற்ற நாளில் பாக்கிய ஸ்தானாதிபதிக்குரிய தெய்வங்களை வழிபட்டு வாருங்கள்.

குருவின் வக்ர இயக்கம்
ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். மீண்டும் 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரைபஞ்சம -அஷ்டமாதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறும்பொழுது பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், 9-ம் இடத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால், தந்தை வழி உறவில் விரிசல்கள் வரலாம். சொத்துக்களை விற்கும் பொழுதும், வாங்கும் பொழுதும், பத்திரங்களில் கையெழுத்திடும் பொழுதும் நன்றாக சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு 13.4.2022-ல் மீன ராசிக்கு பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை உங்கள் ராசியிலும், 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகின்றது.

ராசியைக் குரு பார்ப்பதால், லட்சியங்கள் நிறைவேறும். நினைத்தபடி வாழ்க்கைப் பாதையில் மாற்றங்கள் ஏற்படும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அனைத்து முன்னேற்றங்களும் அடுக்கடுக்காக வந்து சேரும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். மருத்துவச் செலவுகளில் இருந்து விடுதலை கிடைக்கும். குடும்ப முன்னேற்றத்திற்கு குந்தகம் விளைவித்தவர்கள், உங்களை விட்டு விலகுவர்.

ராகு-கேது பெயர்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3-ம் இடத்திற்கு கேதுவும், 9-ம் இடத்திற்கு ராகுவும் வருகிறார்கள். 9-ல் ராகு சஞ்சரிக்கும் பொழுது பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல முன்னேற்றங்கள் உண்டு. தளராத முயற்சியும், தன்னம்பிக்கையும் உங்கள் நிலையை உயர்த்தும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு உழைத்த உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும். ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படும் நேரம் இது என்பதால், தேக்க நிலை மாறும். திடீர் வரவும் வந்து சேரும்.

3-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் உடன்பிறப்புகளின் ஒற்றுமை பலப்படும். அவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வழக்குகள் சாதகமாக அமையும். ‘மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அவர்கள் வாயிலாக ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்போடு, புதிய ஒப்பந்தங்களை வரவழைத்துக் கொள்வீர்கள். இழந்த பொறுப்புகள், பதவிகள் கூட சிலருக்கு கிடைக்கும்.

சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், 7-ம் இடத்திற்கும் அதிபதியாக சனிபகவான் இருப்பதால் குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கலாம். ஒரு சில காரியங்களில் ஏமாற்றங்கள், பண இழப்புகள் ஏற்படலாம். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால், பிரச்சினைகள் உருவாகலாம். பிள்ளைகளால் தொல்லைகளும், செலவுகளும் உண்டாகும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நேரம் இது.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை செவ்வாய் – சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை. திடீர் விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். வாங்கிய சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். மனக்கசப்பு தரும் தகவல் உறவினர்கள் வாயிலாக வரலாம். உயர்ந்த மனிதர்களின் பகையையும், உடன் பணிபுரிபவர்களால் உபத்திரவங்களையும் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்படலாம். வேலைப்பளு கூடும். வேலையை விட்டு விலகும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு உருவாகலாம். தெய்வ வழிபாடுகளால் அமைதி காண வேண்டிய நேரம் இது.

பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு புதிய வாய்ப்புகள் பலவற்றையும் வரவழைத்துத் தரும் ஆண்டாகவே அமையப் போகின்றது. கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். புதிய திருப்பங்களைச் சந்திக்கும் விதத்தில் குருவின் பார்வை பலம்கொடுக்கப் போகின்றது. எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தாய் மற்றும் உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். அவர்கள் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்களும் வெற்றிபெறும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். செவ்வாய் -சனி பார்வை காலத்தில், எதையும் யோசித்துச் செய்வது நல்லது.

வளர்ச்சி தரும் வழிபாடு
வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருபகவானை வழிபடுவதோடு, வைரவன்பட்டி கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments