HomeAstrologyகடகம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை

கடகம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

கடக ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தோடும், கண்டகச் சனியின் சஞ்சாரத்தோடும் பிறக்கின்றது. எனவே விரயங்களையும், விருப்பதிற்கு எதிரான சூழ்நிலையையும் சந்திக்கக்கூடிய ஆண்டாகவே இந்தப் புத்தாண்டு அமைகின்றது. இருப்பினும் தொழில் ஸ்தானத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கை ஏற்பட்டு கூட்டுக்கிரக யோகம் உருவாகின்றது. அத்தோடு புத -சுக்ர யோகமும், புத – ஆதித்ய யோகமும் இருப்பதால், காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். தெய்வ வழிபாடுகளும், முன்னோர் வழிபாடும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், தொழில் ஸ்தானத்தில் தனாதிபதி சூரியனோடும், சகாய -விரய ஸ்தானாதிபதி புதனோடும் இணைந்திருக்கின்றார். யோகம் தரும் செவ்வாய், லாப ஸ்தானத்தில் ராகுவோடு கூடியிருக்கின்றார். எனவே துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உறவினர்களைக் காட்டிலும் நண்பர்களின் ஆதரவோடு நல்ல காரியங்கள் பலவற்றையும் செய்து முடிப்பீர்கள். சுக்ரனும், செவ்வாயும் பரிவர்த்தனை யோகம் பெற்று ஆண்டு தொடங்குவதால், ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டு. பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் மன அமைதி குறைவாகவே இருக்கும்.

புத – ஆதித்ய யோகம் இருப்பதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடலாம். பிள்ளைகளின் பட்ட மேற்படிப்பு சம்பந்தமாக, ஏதேனும் முயற்சிகள் செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். சுபவிரயங்கள் அதிகரிக்கும் ஆண்டு இது. பிள்ளைகளின் மணவிழா, பெற்றோர்களின் மணிவிழா, முத்து விழா, பவளவிழா மற்றும் புதுமனை புகுவிழா போன்ற விழாக்களை நடத்திப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

குருவின் வக்ர இயக்கம்ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் அவர், வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். இதன் விளைவாக கடன்சுமை குறையும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு, புதிய பொறுப்புகள் வரலாம். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். குரு 9-ம் இடத்திற்கு அதிபதியாக விளங்குவதால், தந்தை வழியில் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குரு பகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, அதன் பிறகு 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு 13.4.2022-ல் மீன ராசிக்குப் பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 4, 12 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. எனவே அந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் வாயிலாக உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகின்றது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது 2-ம் இடம் என்பது வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிப்பதாகும். எனவே குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். கொடுக்கல் – வாங்கல்கள் ஒழுங்காகும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத சில காரியங்கள், இப்பொழுது நடைபெறும். கல்வித் தடை அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கடல்தாண்டிச் சென்று பணிபுரிய வேண்டுமென்று விரும்பியவர்களுக்கு அது கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். இடம், வீடு வாங்குவது சம்பந்தமாக அல்லது விற்பது சம்பந்தமாக நீங்கள் செய்த முயற்சி கைகூடும்.

குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். குறிப்பாக வீட்டிற்குத் தேவையான விலைஉயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்யாண காரியங்களை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் திடீரென மாற்றங்கள் வரலாம். வரும் மாற்றங்கள் எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதே சிறந்தது. மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்க்க முன்வரவில்லை என்பதனால், வேறு வேலைக்கு முயற்சி செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.

மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. இதன் விளைவாக இதுவரை இருந்து வந்த ஆரோக்கியத் தொல்லை அகலும். ரண சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொன்ன மருத்துவர்கள், இனி சாதாரண சிகிச்சையிலேயே குணமாக்கிவிடலாம் என்று ஆணித்தரமாகச் சொல்வர். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் இனி வந்து கொண்டேயிருக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதியும், வீட்டை விரிவு செய்து கட்டும் முயற்சியிலும் உங்களுடைய எண்ணங்கள் செல்லலாம்.

ராகு-கேது பெயா்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 4-ம் இடத்தில் கேதுவும், 10-ம் இடத்தில் ராகுவும் வரப்போகின்றார்கள். 10-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால், தொழில் ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே, உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, ‘சுயதொழில் செய்தால் என்ன?’ என்ற சிந்தனை உருவாகும். தொழில் செய்ய முன்வரும்பொழுது கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். அரசு வழியில் கூட எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. எனவே வாழ்க்கைத் துணையோடு பிரச்சினைகள் வரலாம். உங்களுக்கு வாய்த்த தொழில் பங்குதாரர்கள் உங்களை விட்டு விலகலாம். எதிர்பாராத இழப்புகள், விரயங்கள் உண்டு. எதையும் எளிதில் நம்பும் உங்களுக்கு, சனி பகவான் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிமாற்றம் அல்லது பணிநீக்கம் செய்யப்படலாம்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2022 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் – சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் மிகவும் விழிப்புணர்ச்சி தேவை. என்னதான் நீங்கள் முறையாகச் செயல்பட்டாலும், எதிரிகள் உங்கள் செயல்பாடுகளில் குறையையே காண்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மனக்கலக்கம் ஏற்படும் நேரம் இது.

பெண்களுக்கான பலன்கள்
கொஞ்சம் விழிப்புணா்ச்சியோடு செயல்பட வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. கண்டகச் சனியின் ஆதிக்கத்தால் கடமையில் தொய்வு ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் அடிக்கடி ஏற்படலாம். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுங்கள். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் ஆகாமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். செவ்வாய் – சனி பார்வை காலத்தில் மிகுந்த கவனம் தேவை. அனுமன் வழிபாடு அல்லல் தீர்க்கும்.

வளா்ச்சி தரும் வழிபாடு
பவுர்ணமி தோறும் விரதமிருந்து அம்பிகையை வழிபாடு செய்து வாருங்கள். மேலும் உங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் அபிராமி அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டால் வாழ்க்கை வசந்தமாக மாறும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments