மிதுனம் (மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)
மிதுன ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு, உங்களுக்கு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தோடு பிறக்கின்றது. அதே நேரத்தில் கும்பத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே அஷ்டமத்துச் சனியால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும், பிரச்சினைகள் தொடர்ச்சியாக வந்துகொண்டுதான் இருக்கும். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் – வாங்கல்களில் விழிப்புணர்ச்சியோடு இருந்தால்தான் விரயங்களில் இருந்து தப்பிக்க முடியும்.
- Advertisement -
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், சூரியனோடு இணைந்து புத – ஆதித்ய யோகத்தை உருவாக்குகின்றார். லாபாதிபதி செவ்வாய், விரயாதிபதி சுக்ரனோடு பரிவா்த்தனை யோகம் பெற்றிருக்கின்றார். இதன் விளைவாக விரயத்திற்கேற்ப லாபம் வந்து கொண்டேயிருக்கும். எந்த ஒரு காரியத்தையும் கையில் பணத்தை வைத்துக் கொண்டுதான் தொடங்க வேண்டும் என்பது நியதி. ஆனால் உங்களுக்கு ஆண்டு தொடக்கத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் காரியத்தை தொடங்கி விட்டால், உங்களது முயற்சியின் விளைவாக அதற்குரிய தொகை எப்படியாவது கிடைத்து விடும். கிரக நிலைகளின் பலத்தை அறிந்து அதற்குரிய தெய்வ வழிபாடுகளை யோகபலம் பெற்ற நாளில் செய்து கொள்ளுங்கள்.
6-ல் கேதுவும், 8-ல் சனியும் இருக்கும் இந்த வேளையில், சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கமும் மேலோங்கி இருக்கின்றது. எனவே இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், வாகன மாற்றம், தொழில் மாற்றம் போன்றவற்றில் ஏதேனும் ஒரு மாற்றத்தை சந்திக்க நேரிடும்.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருக்கும் பொழுது, எதையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்துச் செய்வது நல்லது. நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும்.
குருவின் வக்ர இயக்கம்
ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். மீண்டும் 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர். எனவே அவர் வக்ரம் பெறும் பொழுதெல்லாம் நன்மைகளே நடைபெறும். குறிப்பாக திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தத்தளித்தவர்களுக்கு, சாதகமான சூழல் உருவாகும்.
குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, அதன் பிறகு 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது குருவின் பார்வை உங்கள் ராசியிலும், 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகின்றது.
உங்கள் ராசியில் பதியும் குரு பார்வையால், உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். திடீர் திருப்பங்கள் ஏற்படும்.
குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் வழக்குகள் சாதகமாக முடியும். வாய்ப்புகளை உபேயாகப்படுத்திக் கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். சகோதர ஒற்றுமை பலப்படும். பொதுநலம் மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு, புதிய பொறுப்புகள் வரலாம். வெற்றிகள் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இப்பொழுது நடைபெறும். உத்தியோகம் சம்பந்தமாக நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். இதுவரை பாகப்பிரிவினையில் தலையிட்ட மூன்றாம் நபர்கள் விலகிவிடுவர். நீங்களே நேரடியாக முடிவெடுத்து சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட தற்காலிக இடமாற்றம் மாறுதலுக்குள்ளாகும்.
மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் குரு வருகின்றார். எனவே அக்காலத்தில் விழிப்புணர்ச்சி அதிகம் தேவை. தொழிலில் திடீர் மாற்றங்கள் உருவாகலாம்.
ராகு-கேது பெயர்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை லாப ஸ்தானத்தில் ராகுவும், பஞ்சம ஸ்தானத்தில் கேதுவும் வருகிறார்கள். பொதுவாக 11-ல் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். தொழிலிலும் லாபம் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்கு சென்று குடியேற நினைத்தவர்களுக்கு, கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் தேடி வரும். ‘இந்த தொழிலில் இவ்வளவு லாபமா?’ என்று ஆச்சரியப்படும் விதத்தில் தொழில் நடைபெறும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், பாக்கிய ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் இக்காலத்தில் மன நிம்மதி கொஞ்சம் குறையும். அதிக முயற்சி செய்தும் ஒரு சில காரியங்கள் தாமதப்படும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய்- சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் பகைக் கிரகங்களின் பார்வை இருப்பதால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர், திடீரென எடுக்கும் முடிவுகளால் செலவுகள் அதிகரிக்கலாம்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தோடு தொடங்குவதால், மனக்குழப்பம் அதிகரிக்கும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலமே வாழ்வில் அமைதி காண இயலும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வாத உணவுகளை உட்கொண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். நிதிப் பற்றாக்குறை நீடிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காது. சகப் பணியாளர்களால் தொல்லைகள் உருவாகும். சனிக்கிழமை விரதமும், அனுமன் வழிபாடும் சந்தோஷம் வழங்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்து வாருங்கள். மேலும் யோக பலம் பெற்ற நாளில் யோக நரசிம்மர் வழிபாட்டை மேற்கொண்டால் தேகநலம் சீராகும். செல்வ வளம் பெருகும்.